×

சென்னை பள்ளிகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: சென்னை பள்ளிகளுக்கிடையிலான 2023-24ஆம் கல்வியாண்டிற்கான விளையாட்டுப் போட்டிகளை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார். இன்று (01.02.2024) சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் சென்னை பள்ளிகளுக்கிடையிலான 2023-24ஆம் கல்வியாண்டிற்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

இவ்விழாவில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு பங்கேற்று, பள்ளி மாணவ, மாணவியரின் அணிவகுப்பினைப் பார்வையிட்டு, பின்னர் ஒலிம்பிக் சுடரினை ஏற்றி வைத்து, பலூன்களை பறக்கவிட்டு விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.

இவ்விழாவினையொட்டி நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டார். இதன் தொடர்ச்சியாக, விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இவ்விழாவில், மேயர் ஆர். பிரியா, மதிப்பிற்குரிய துணை மேயர் மு.மகேஷ்குமார், கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., நிலைக்குழுத் தலைவர்கள் த. விஸ்வநாதன் (கல்வி), டாக்டர் கோ. சாந்தகுமாரி (பொது சுகாதாரம்), சர்பஜெயாதாஸ் நரேந்திரன் (வரிவிதிப்பு (ம) நிதி), கூடுதல் ஆணையர் (சுகாதாரம்) திரு.சங்கர்லால் குமாவத், இணை ஆணையர் (பணிகள்) டாக்டர் ஜி.எஸ்.சமீரன், துணை ஆணையர் (கல்வி) ஷரண்யா அறி, வட்டார துணை ஆணையர்கள் எம்.பி.அமித், (தெற்கு), கே. ஜெ. பிரவீன் குமார், (மத்தியம்), கட்டா ரவி தேஜா, (வடக்கு), மண்டலக்குழுத் தலைவர்கள் பி. ஶ்ரீராமுலு (இராயபுரம்), நேதாஜி யு. கணேசன் (தண்டையார்பேட்டை) மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் பேசும்போது தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் கல்விக்காகவும், விளையாட்டு மேம்பாட்டிற்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை மாநகராட்சி மேயராக இருந்து போது, சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் ஒரு லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர் என்று அப்போதைய முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞரிடம் தெரிவித்தார்.

தற்போது சென்னை பள்ளிகளில் ஒரு இலட்சத்து 20 ஆயிரத்து 175 மாணவர்கள் பயின்று வருகின்றனர். சென்னை மாநகராட்சிப் பள்ளி என்பது சென்னை பள்ளி என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, 338 சென்னை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், 81 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என தற்போது மொத்தம் 419 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.

சென்னை பள்ளிகள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, 2023-24ஆம் கல்வியாண்டிற்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. சென்னை பள்ளிகளில் பயின்று உலகம் முழுவதும் சென்று மிகப்பெரிய பதவிகளுக்கு செல்லும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். அவ்வாறு சென்று திரும்பி வரும்போது, இந்தப் பள்ளியில் படித்தோம் என்ற பெருமை சென்னை பள்ளிக்கு உங்களால் கிடைக்கும்.

மாணவர்களாகிய நீங்கள் விளையாட்டு மட்டுமில்லாமல், நன்றாக கல்வி பயின்று எத்தகைய பதவிகளில் இருந்தாலும், எங்கு சென்றாலும் உங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களை மறவாமல் நன்றி செலுத்துபவர்களாகவும், பள்ளிக்கு பெருமை சேர்ப்பவர்களாகவும் இருக்க வேண்டும். இந்த விளையாட்டுப் போட்டி சிறப்பாக வெற்றி பெற எனது வாழ்த்துகள் எனத் தெரிவித்தார்.

சென்னை தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் 64,864 மாணவ, மாணவியர் 10 மண்டலங்களாகப் பிரித்தும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 44,382 மாணவ, மாணவியருக்கு 4 கல்வி மாவட்டங்களாகப் பிரித்தும் தனிநபர் மற்றும் குழுப் போட்டிகள் நடத்தப்பட்டதில், ரூபாய் 19 இலட்சத்து 35 ஆயிரத்து 600 மதிப்பில் 5,340 பரிசுகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, மழலையர் வகுப்புகளில் (எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி.) பயின்ற குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற 400 குழந்தைகளுக்கு ரூ.90 ஆயிரம் மதிப்பில் புத்தகப்பைகள் வழங்கப்பட்டுள்ளது.

தடகளப் போட்டிகள், நீளம் தாண்டுதல் மற்றும் குண்டு எறிதல் ஆகிய போட்டிகளில் சென்னை பள்ளிகளின் மண்டல அளவில் மற்றும் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 940 மாணவர்களுக்கான இறுதிப் போட்டிகள் இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்படுகிறது. மேலும், புள்ளிகளின் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்திறன் கோப்பைகளும் வழங்கப்படுகிறது. இதுதவிர ஏற்கனவே மாநில அளவில் மற்றும் தேசிய அளவில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 17 மாணவ, மாணவியருக்கு தனித்திறன் கோப்பைகளும் வழங்கப்படுகிறது.

The post சென்னை பள்ளிகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு appeared first on Dinakaran.

Tags : Minister ,K. N. Nehru ,Chennai ,Municipal Administration ,KN Nehru ,Chennai Jawaharlal Nehru Sports Arena ,
× RELATED பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர்...